ஐகோர்ட்டு தடை விதித்து உள்ள நிலையில் தொட்டியம் பகுதியில் மணல் கடத்தல்

ஐகோர்ட்டு தடை விதித்து உள்ள நிலையில் தொட்டியம் பகுதியில் மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-10-09 23:00 GMT
தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் காவிரி கரையோரத்தில் உள்ள திருஈங்கோய்மலை, மணமேடு, சீனிவாசநல்லூர், காரைக்காடு, எம்.புத்தூர், நத்தம், சீலைப்பிள்ளையார்புத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் இயங்கி வந்தன. தற்போது இந்த பகுதிகளில் மணல் எடுக்க மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதால் இரவு நேரங்களில் மாட்டுவண்டிகள் மூலம் மணல் எடுத்து வந்து வாழை தோட்டங்கள், கரையோரங்களில் உள்ள காலியிடங்களில் கொட்டி வைத்து திருட்டுத் தனமாக மணலை கடத்தி வருகிறார்கள்.

இரவு நேரங்களில் மணல் திருடும் கும்பல் அதை பகல் நேரங்களில் லாரிகளில் ஏற்றி நாமக்கல், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு என பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்து தினமும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

இது குறித்து தொட்டியம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் கூறுகையில் திருட்டு மணல் ஏற்றி வரும் மணல்லாரி டிரைவர்கள், அதிகாரிகள் நம்மை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் நகருக்குள் வரும்போது வேகமாக லாரிகளை ஓட்டி வருகின்றனர். இதனால் தொட்டியம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது.

தொட்டியம் பகுதியில் அரசால் கட்டப்படும் பசுமை வீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகள், பொதுமக்களின் மற்ற மராமத்து பணிகளுக்கு குறிப்பிட்ட தொகையில் மணல் வழங்கப்பட்டு வந்த நிலையில் மணல் தட்டுப்பாடு மற்றும் தற்போது மணல் விலை உயர்ந்து உள்ளதாலும் அரசு ஒதுக்கியுள்ள தொகையில் வீடு கட்ட முடியாமல் பயனாளிகளும், பொதுமக்களும்் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தொட்டியம் உள்ளிட்ட காவிரி கரை பகுதியில் குடிநீர் கிணறு உள்ள இடங்களில் திருட்டு மணல் எடுப்பதால் கரையோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த தயங்கமாட்டோம் என்று தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்