தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தலாம்

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் என்று பா.ஜனதா கட்சியின் எஸ்.சி. அணி தேசிய பொதுச்செயலாளர் ராமு கூறினார்.

Update: 2017-10-09 23:00 GMT
சேலம்,

பா. ஜனதா கட்சி எஸ்.சி. அணியின் மாநில செயற்குழு கூட்டம் சேலம் சுவர்ணபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

இதில் பா.ஜனதா எஸ்.சி. அணியின் தேசிய பொதுச்செயலாளர் ராமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்திற்கு பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை தமிழக அரசு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு இலவச பொருட்களை வழங்க பயன்படுத்துகிறது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அரியலூர் மாணவி அனிதா சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தலாம். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித் ஷா ஆகிய இருவரும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு ராமு கூறினார்.

முன்னதாக நடந்த செயற்குழு கூட்டத்தில், தமிழக அரசு அனைத்து துறைகளிலும் துப்புரவு தொழிலாளர்கள் பணி நியமனம் செய்ய இடஒதுக்கீட்டின்படி அனைத்து சமுதாயத்திலும் துப்புரவு தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும் 25 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் எஸ்.சி. மக்களுக்கு கொடுத்த வீட்டு மனைகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்