அரசு ஆஸ்பத்திரியில் மாத்திரைகள் வாங்க நீண்டவரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாத்திரை வாங்க நீண்டவரிசையில் காத்திருப்பதால் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாவதை தவிர்க்க கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2017-10-09 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெற தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். உள்நோயாளிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்துகள், மாத்திரைகள் வழங்க புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு பகுதியில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தர்மபுரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து உள்ளது. இவர்களுக்கும் ஏற்கனவே உள்ள கவுண்ட்டர்களில் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதனால் இந்த கவுண்ட்டர்களில் புறநோயாளிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாத்திரைகள் வாங்க நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக புறநோயாளிகள் தரப்பில் கூறிய தாவது:-


தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்பிற்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட பலமடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் மாத்திரைகள் வழங்கும் இடத்தில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலர் நீண்டநேரம் வரிசையில் நிற்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் மாத்திரைகள் வழங்கும் இடத்தில் கூடுதல் கவுண்ட்டர்களை திறக்க வேண்டும். தேவைப்பட்டால் காய்ச்சலுக்கான மாத்திரைகள், மருந்துகளை மட்டும் வழங்க தனியாக சிறப்பு கவுண்ட்டர்களை ஏற்படுத்த ஆஸ்பத்திரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்