அரியாங்குப்பத்தில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி கணவன்–மனைவி குடும்பத்துடன் தலை மறைவு

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான கணவன்–மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-10-09 23:00 GMT

அரியாங்குப்பம்,

புதுவை அரியாங்குப்பம் சுப்பையாநகரை அடுத்துள்ள ஜெயபால் நகரை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது45) ஜோதிடர்.இவரது மனைவி ஜெயபாரதி (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். 10ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் ஆண்டு தோறும் தீபாவளி சீட்டு நடத்தி பொது மக்களிடம் பணம் வசூலித்து வந்தனர். மாதாமாதம் ஒருகுறிப்பிட்ட தொகையை வாங்கி தீபாவளி சமயத்தில் இனிப்பு வகைகள், சில்வர் பாத்திரங்கள், மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வந்தனர்.

இதே போல் கடந்த 11 மாதங்களாக ஒரு நபருக்கு தலா ரூ.550 வீதம் வசூலித்து வந்தனர்.வேல்முருகன் ஜோதிடர் என்பதால் அக்கம் பக்கத்தினர் மட்டுமின்றி பக்கத்து ஊர்களில் இருந்தும் ஜாதகம் பார்க்க வருபவர்கள், குறிகேட்க வருபவர்கள் என ஏராளமானோர் இவர்களிடம் தீபாவளி சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர்.இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒரு சிலருக்கு சீட்டு பணம் திருப்பி செலுத்தவில்லை. இதனால் அவர்கள் அடிக்கடி வந்து பணம் கேட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக அவர்களது வீட்டு பூட்டி கிடந்தது. இதனால் பணம் கேட்டு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து, சுப்பையாநகர் அமுதா, நைனார்மண்டபம் சத்யா, மரியஜோதி, ஜெயா உள்பட பலர் அரியாங்குப்பம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் தாங்கள் கடந்த சில ஆண்டுகளாக இவர்களிடம் பணம் செலுத்தி வந்தோம், இந்த ஆண்டு ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டார்கள் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுக்கொடுங்கள் என குறிப்பிட்டு இருந்தனர். சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.போலீசில் புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது.இவர்களிடம் சுமார் ரூ.90 லட்சத்துக்கும் அதிகமாக பணம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தலைமறைவான வேல்முருகன், ஜெயபாரதி ஆகியோர் ஒரு சிலருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.அதில் சீட்டுப்பணம் நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் எங்களால் பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை. ஆதலால் எங்கள் வீட்டை விற்று பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் ஆறுபடை வீடுகளுக்கு செல்கிறோம். எங்காவது ஒரு ஊரில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

அரியாங்குப்பம் போலீசார் இதுகுறித்து விசாரித்து, தலைமறைவான கணவன்–மனைவியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்