18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் விவகாரம் சபாநாயகரை நான் விடமாட்டேன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் சபாநாயகரை நான் விடமாட்டேன் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.;

Update: 2017-10-09 23:30 GMT

ஆலந்தூர்,

அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன் திருச்சி செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தேர்தல் ஆணையத்திற்கு பணம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் வெளியிடப்பட்ட ஆடியோவில் உள்ள குரலும், எனது குரலும் ஒன்றாக இல்லை. அந்த குரல் என்னுடையது என்றும் அவர்கள் சொல்லவில்லை.

மாதிரியாக இருக்கிறது என்று தான் சொல்லி இருக்கிறார்கள். எனவே இது நாங்கள் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க உதவியாக இருக்கும்.

சசிகலாவிற்கு ஆதரவாக எத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள்? என தினமும் சொன்னால் வெறும் கையில் முழம் போடுவதாக நினைக்கலாம். எனவே அதுபற்றி சொல்ல விரும்பவில்லை. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அது தெரியவரும்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை நிரூபிப்பதை நிச்சயமாக அதிக நாள் நீட்டிக்க முடியாது. வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடர் வரைதான் தள்ளிவைக்க முடியும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க கூடிய வழக்குகளின் விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது தவறு என நிச்சயமாக தீர்ப்பு வரும். இதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றாலும் நாங்கள் விடமாட்டோம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தான் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு தந்தனர். ஆனால் சபாநாயகர் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்பட்டு உள்ளார். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு உள்ளது.

சபாநாயகருக்கு சபைக்குள் வேண்டும் என்றால் அதிகாரம் இருக்கலாம். ஆனால் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திவிட்டார். எந்த மனிதரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். எனவே இந்த விவகாரத்தில் நான் சபாநாயகரை விடமாட்டேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜன் உடல்நிலை நன்றாக முன்னேறி வருகிறது. தினமும் பொதுசெயலாளர் சசிகலா சென்று பார்த்து வருகிறார். ஒரு வாரம் கழித்து அனைவரும் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்