திருப்போரூர் முருகன் கோவிலில் 3 மாதம் பிச்சைக்காரராக வாழ்ந்த கோடீஸ்வரர்

குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய கோடீஸ்வரர், 3 மாதங்களாக திருப்போரூர் முருகன் கோவிலில் பிச்சைக்காரராக வாழ்ந்து வந்தார். மனைவி, மகன்கள் கதறி அழுது கூப்பிட்டதால் மனம் மாறி அவர்களுடன் வீட்டுக்கு சென்றார்.

Update: 2017-10-09 23:30 GMT

திருப்போரூர்,

திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தீவனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். கோடீஸ்வரர். விவசாய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் முன்னேறியவர். இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். ஒரு மகனுக்கு மட்டும் திருமணம் ஆகி உள்ளது. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் மருமகளுடன், நடராஜனுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்ட நடராஜன், தனது மனைவி மற்றும் மகன்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஒவ்வொரு இடங்களிலும் உள்ள கோவில்களாக சுற்றித்திரிந்த நடராஜன், கடைசியாக காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்தார். இந்த கோவில் தலம் அவருக்கு பிடித்து விட்டதால் இங்கேயே தஞ்சம் அடைந்தார்.

கோவிலின் வெளிப்புற மண்டபம் பகுதியில் தங்கி இருந்து, கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழங்கும் அன்னதானத்தை சாப்பிட்டு நாட்களை கடத்தினார். கடந்த 3 மாதங்களாக பிச்சைக்காரராகவே அங்கு தங்கி வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில் மாயமான நடராஜனை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கும் சென்று பார்த்தனர். ஆனால் நடராஜனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நடராஜனின் மனைவி மற்றும் மகன்கள் காரில் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அருகே உள்ள கடையில் டீ சாப்பிட சென்றனர்.

அப்போது தாடி வளர்ந்த நிலையில் தனது தந்தையை போல் ஒருவர் அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து இருப்பதை கண்ட அவருடைய மகன்கள், அருகே சென்று பார்த்தபோது தங்கள் தந்தை நடராஜன்தான் பிச்சைக்காரர் போல் அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகன்கள் 3 பேரும் தந்தையை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அதற்குள் காரில் அமர்ந்து இருந்த அவருடைய மனைவியும் தனது கணவர் கிடைத்து விட்டதை அறிந்து காரில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கி கணவரிடம் ஓடி வந்து அவரது நிலையை கண்டு கதறினார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்களும் கண் கலங்கினர்.

நடராஜனிடம் அவருடைய மகன்கள் மன்னிப்பு கேட்டு தங்களுடன் வீட்டுக்கு வரும்படி கெஞ்சினர். மனைவி மற்றும் மகன்களின் கண்ணீரை பார்த்து கோபம் தணிந்த நடராஜன், அவர்களுடன் வீட்டுக்கு வர சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் அங்குள்ள சலூன் கடையில் முடிவெட்டி, ஷேவ் செய்துகொண்டு நடராஜன் புதுமனிதராக மனைவி மற்றும் மகன்களுடன் காரில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்