மீஞ்சூர் அருகே கட்டிடம் கட்டியதாக ரூ.30 லட்சம் மோசடி எண்ணூர் துறைமுக அதிகாரி உள்பட 8 பேர் மீது வழக்கு

மீஞ்சூர் அருகே சமுதாய நலக்கூடம் கட்டிடம் கட்டியதாக ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக எண்ணூர் துறைமுக அதிகாரி உள்பட 8 பேர் மீது சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2017-10-09 23:00 GMT

மீஞ்சூர்,

எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு, கடப்பாக்கம், காட்டூர் ஆகிய பகுதிகளில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு தலா ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சமுதாய கூடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் டெண்டர் விடப்பட்டது.

அத்திப்பட்டு, கடப்பாக்கம் ஆகிய 2 இடங்களில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் காலனியில் சமுதாய நலக்கூடம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. கட்டிடம் கட்ட ஜல்லி, மணல் கொட்டப்பட்டது. ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பால் பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டு இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட தகவலில், காட்டூர் காலனியில் ரூ.30 லட்சத்தில் கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கட்டப்படாத கட்டிடத்துக்கு ரூ.30 லட்சம் செலவு செய்யப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த தியாகராஜன், இதுபற்றி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக எண்ணூர் துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சாரியா உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் காட்டூர் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வாசுதேவன் கூறும்போது, ‘‘காட்டூர் காலனியில் பல இடங்களில் சமுதாய நலக்கூடம் கட்ட பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் பணிகள் தொடங்க தாமதம் ஆனது. இறுதியாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மீஞ்சூர் ஒன்றிய உதவி பொறியாளர் நரசிம்மன் மேற்பார்வையில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

மேலும் செய்திகள்