பதிவு எண் மாறியதால் கட்டணம் கேட்டு மேலூர் சுங்கசாவடியில் அரசு பஸ் சிறைப்பிடிப்பு

மேலூர் சுங்கசாவடியில் உள்ள ஊழியர்கள் பதிவு எண் மாறியதால், கட்டணம் கேட்டு அரசு பஸ்சை சிறைப்பிடித்தனர். இதனால் போக்குவரத்து பதிக்கப்பட்டது.;

Update: 2017-10-09 22:45 GMT

மேலூர்,

மதுரையை அடுத்த மேலூர் நான்கு வழிச்சாலையில் கத்தப்பட்டி என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு வந்த ஒரு அரசு பஸ், மதுரைக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது சுங்கச்சாவடிக்கு சிறிது தூரம் முன்பாக பஸ் பழுதாகி நின்றது.

இதுகுறித்து பஸ்சின் டிரைவர், கந்தவர்வக்கோட்டை பஸ் டெப்போவிற்கு தகவல் கூறி, மாற்று பஸ்சை வரவழைத்தார். அந்த பஸ் சுங்கசாவடியில் வந்த போது, அங்கிருந்த ஊழியர்கள் மாற்று பஸ்சின் பதிவு எண் வேறு என்பதால், சுங்க கட்டணம் செலுத்துமாறு கூறினர். இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில், மாற்று அரசு பஸ்சை சுங்கசாவடி ஊழியர்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மற்ற வாகனங்களில் வந்தவர்கள் கேட்ட போது, சுங்கசாவடியில் பணிபுரியும் வட மாநில ஊழியர்கள் சிலர் ஹிந்தியில் ஆபாசமாக பேசினராம். இதை அங்கிருந்தவர்கள் தட்டி கேட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு மாற்று பஸ்சிற்கு கட்டணம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, சுங்கசாவடி ஊழியர்கள் சிறை பிடித்த பஸ்சை விடுவித்தனர்.

இந்த சுங்கசாவடியில் உள்ள வடமாநில ஊழியர்கள் தங்களது மொழியில் ஆபாசமாக திட்டுவதால் இதுபோன்ற தகராறுகள் நடைபெற்று வருவதாகவும், எனவே ஆபாசமாக பேசும் வட மாநில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் உள்பட வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்