திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி பள்ளி மாணவியும் இறந்த சோகம்

திருப்பூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானார். மேலும் தாராபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2017-10-09 22:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 44). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி கவிதா (37). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 6–ந்தேதி கவிதா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனே அவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும், அந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரம் கண்ணகி நகரை சேர்ந்த குணசேகரன்–சாந்தி தம்பதியின் மகள் அருந்ததி(14). இவர் தாராபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7–ந்தேதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தாராபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவருடைய பெற்றோர் அழைத்து வந்தனர். காய்ச்சல் அதிகமாக இருக்கவே, அதே மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் அவருக்கு காய்ச்சல் அதிகரிக்கவே, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் மாணவி அருந்ததி பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் உடலை தாராபுரத்துக்கு கொண்டு வந்தனர். அவருடைய உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள், உடன் பயின்ற பள்ளி மாணவ–மாணவிகள் கதறி அழுதனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்