சத்தி கடைவீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 14 கடைகள் சீல்

சத்தி கடைவீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 14 கடைகள் வாடகை செலுத்தவில்லை எனக்கூறி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2017-10-09 22:45 GMT

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் கடைவீதியில் வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 75 கடைகள் அதே வீதியில் உள்ளது. இந்த வீதிக்கு செயல் அலுவலர்கள் அமுதசுரபி (வேணுகோபாலசாமி கோவில்), அருள்முருகன் (சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவில்), ரமணிகாந்த் (ஈரோடு பெரிய மாரியம்மன்), பாலமுருகன் (அந்தியூர் பத்ரகாளியம்மன்) மற்றும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், கோவை மண்டல இணை இயக்குனர் ராஜமாணிக்கம், வருவாய்த்துறையினர் நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென வந்தார்கள்.

பின்னர் அவர்கள் ஒவ்வொரு கடை வியாபாரிகளை வெளியே வரக்கூறி கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, ‘2001–ம் ஆண்டு அரசு உத்தரவின்படி வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமான 75 கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டது. ஆனால் 22 கடை வியாபாரிகள் ரூ.1லட்சம் முதல் ரூ.2½லட்சம் வரை பாக்கி வைத்திருந்தார்கள். மற்ற கடை வியாபாரிகள் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாகவே பாக்கி வைத்துள்ளார்கள். சீல் வைப்பது அறிந்ததும் 8 கடை வியாபாரிகள் வாடகையை செலுத்திவிட்டார்கள். இதைத்தொடர்ந்து வாடகை செலுத்தாத 14 கடைகளுக்கு சீல் வைத்தோம். இதுதவிர ரூ.1லட்சத்துக்கும் குறைவாக வாடகை பாக்கி வைத்துள்ள 53 கடை வியாபாரிகளிடம் தவணை முறையில் செலுத்துமாறு கடிதம் கொடுத்துள்ளோம்.’ என்றனர்.

அதற்கு கோவில் வாடகைதாரர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் கூறும்போது, ‘2001–ம் ஆண்டு கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகையை 15 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. ஆனால் அரசு நிர்ணயித்ததை விட அதிகாரிகள் 15 சதவீதத்துக்கு மேல் வாடகை வசூலிக்கிறார்கள். எனவே வாடகையை குறைக்குமாறு மண்டல அலுவலர், கோவில் செயல் அலுவலரிடம் மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீபாவளி நேரத்தில் இவ்வாறு முன்னறிவிப்பின்றி கடைகளுக்கு சீல் வைப்பதால் நாங்கள் தான் அவதிப்படுகிறோம். எனவே இதுசம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடருவோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்