சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர், எம்.பி. நேரில் ஆறுதல்
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இத்துடன் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கல்லல், தேவகோட்டை, திருப்பத்தூர், இளையான்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 4 தினங்களில் மட்டும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100–க்கும் மேற்பட்டவர்கள் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களை கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை அவர்கள் பார்வையிட்டனர். இவர்களுடன் மாவட்ட கலெக்டர் லதா, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மருத்துவக்கல்லூரி டீன் சாந்திமலர், வருவாய் அலுவலர் இளங்கோ, மருத்துவ அலுவலர் குழந்தை ஆனந்தன், தேவகோட்டை சப்–கலெக்டர் ஆஷா அஜீத், கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அமைச்சர் பாஸ்கரன், அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் லதா மற்றும் மருத்துவமனை டீன் சாந்திமலர் ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவகங்கையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொது வார்டு என தனித்தனியாக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தனி வார்டுகளில் 24 மணிநேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகளுடன், ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன் மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.