சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பரோல் விதிமுறைகள் மீறல் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பரோல் விதிமுறைகள் மீறப்பட்டு வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

Update: 2017-10-09 23:15 GMT

கோவை,

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக சசிகலா பரோலில் வந்துள்ளார். பரோலில் வந்த பின்னர் என்னென்ன செய்ய வேண்டும் என்று சட்ட விதிகள் உள்ளன. ஆனால் வரும் செய்திகளை பார்க்கும்போது அந்த பரோல் விதிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படாமல் மீறப்பட்டு வருகிறது.

சசிகலாதான் யாரையும் சந்திக்கக்கூடாது, ஆனால் நாங்கள் அவரை சந்திக்கலாம் என்று நாஞ்சில் சம்பத் கூறுகிறார். ‘ஸ்லீப்பர் செல்’ ஒவ்வொன்றாக வெளியே வரப்போகிறது என்று சொல்லுகிறார்கள். சசிகலாவை டி.வி.யில் பார்த்த பின்னர் அரசியல் சூழ்நிலை வேறுவிதமாக மாறுகிறது என்று சி.ஆர்.சரஸ்வதி கூறுகிறார்.

பரோலில் வருபவர்கள் எவ்வித அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்ற நிலை இருக்கும்போது, அவர்களை சார்ந்தவர்களே இப்படி கூறுவதை ஏற்க முடியாது. எனவே சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பரோல் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் சரியான முறையில் கையாளவில்லை. எதிர்க்கட்சியினர் சரியாக செயல்பட்டால்தான், ஆளும் கட்சியின் நடவடிக்கை நன்றாக இருக்கும். இனியாவது எதிர்க்கட்சிகள் விழிப்புடன் செயல்பட்டு பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்