இணையதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவேன் என்று விதவை பெண்ணை மிரட்டிய வாலிபர்

ராமநாதபுரம் அருகே இணையதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவேன் என்று விதவை பெண்ணை மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-10-09 11:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை களத்தாவூர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி சர்மிளா(வயது 28). மணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால் விதவைப்பெண் சர்மிளா அவருடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவரின் உறவினரான முதுகுளத்தூர் கொளுந்துரை கிராமம் கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்த முருகவேல்(35) என்பவர் சர்மிளாவிடம் அடிக்கடி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறிவந்தாராம். முருகவேல் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். முருகவேலை திருமணம் செய்து கொள்ள சர்மிளா மறுத்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக ஆத்திரமடைந்த முருகவேல் சர்மிளாவின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படத்துடன் இணைத்து வீடியோவாக பதிவு செய்து திருமணம் செய்துகொள்ளாவிட்டால் இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார்.

மேலும், திருமணம் செய்யாவிட்டால் வாட்ஸ்-அப்பில் பதிவு செய்து அசிங்கபடுத்திவிடுவதாக அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சர்மிளா ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்