ரூ.63 கோடியில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு முன்பு முடிக்க நடவடிக்கை

ரூ.63 கோடியில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு முன்பு முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கந்தசாமி கூறினார்.

Update: 2017-10-09 00:22 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்கு வருகின்றனர். பின்னர் 14 கிலோ மீட்டர் அண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் ரூ.63 கோடி மதிப்பில் கிரிவலப் பாதை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று கிரிவலப் பாதையில் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் இருந்து எமலிங்கம் வரை 4 கிலோ மீட்டர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அந்த பகுதியில் என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ.63 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு முன்பு இந்த பணி முடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

கிரிவலப் பாதையில் கூடுதலாக மரங்கள் நடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் கிரிவலப் பாதையில் வேகமாக செல்லும் வாகனங்களில் வேகங்களை குறைக்க சாலையில் மக்கள் நடமாடும் பகுதி என்ற விளம்பர பலகைகள் வைக்கப்படும்.

இந்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. கிரிவலப் பாதையில் உள்ள சாலை 11 மீட்டரில் இருந்து 16 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட உள்ளது. மேலும் கிரிவலப் பாதையில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்