திசையன்விளையில் டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மதுபிரியர்கள்

திசையன்விளையில் டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்திருக்கிறார்கள்.

Update: 2017-10-09 00:10 GMT

திசையன்விளை,

திசையன்விளையில் டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்திருக்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

திசையன்விளையில் 3 மதுபான கடைகள் இயங்கி வந்தன. பின்னர் அந்த கடைகள் மூடப்பட்டன. இதனால் பெண்கள், சமூக ஆர்வலர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மதுப்பிரியர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அவர்கள் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த மதுபான கடைகளில் மது வாங்கி குடித்து வந்தனர். திசையன்விளையில் மூடப்பட்ட 3 கடைகளில் திசையன்விளை பஸ் நிலையம் அருகே இட்டமொழி ரோட்டில் அமைந்திருந்த மதுபான கடையும் ஒன்றாகும்.

இதற்கிடையே மூடப்பட்ட அந்த கடை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதி மதுப்பிரியர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து அங்கு வந்து மதுபானங்ளை வாங்கி அருந்தி வருகின்றனர். மதுபான கடை மதியம் 12 மணிக்கு தான் திறக்கப்படுகிறது. இதனால் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் காலை முதலே அந்த மதுபான கடையின் முன்பு நீண்ட வரிசையில் காத்து இருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். மேலும் சிலர் அங்கேயே மதுபானங்களை குடித்து விட்டு ரோட்டில் தள்ளாடிக்கொண்டும், விழுந்தும் கிடக்கின்றனர்.

கடை அமைந்துள்ள ரோடு மிகவும் குறுகலானது. இந்த பகுதியில் நூலகம், வங்கி, ஆஸ்பத்திரி ஆகியவை அமைந்துள்ளன. மேலும் இந்த ரோட்டின் வழியாகத்தான் பள்ளி மாணவ–மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. பொதுமக்கள், பெண்கள் இந்த ரோடு வழியாகதான் பஸ் நிலையத்திற்கு சென்று வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். மதுப்பிரியர்கள் இந்த கடையில் நீண்ட வரிசையில் நின்று மது வாங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல பெண்களும், மாணவிகளும் அச்சப்படுகின்றனர்.

எனவே பெண்கள் மற்றும் மாணவிகளின் நலன் கருதி அந்த பகுதியில் உள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்