நெல்லை மாவட்டத்தில் 55 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் 55 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2017-10-09 00:10 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருசிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதில் ஒரு சிலர் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் 55 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு 85 குழந்தைகளும், 190 பெரியவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 38 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளில் 74 குழந்தைகளும், 86 பெரியவர்களும் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளனர். அவர்களில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர புறநோயாளிகளாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்