பெண் சப்–இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி

கலபுரகியில் பெண் சப்–இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2017-10-08 23:17 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி புறநகர் அருகே டபராபாத் கிராமத்தில் நேற்று அதிகாலையில் தனியாக வருபவர்களை தாக்கி கொள்ளையடிக்க திட்டமிட்டு 2 பேர் காத்து நிற்பதாக ராகவேந்திரா நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் மற்றும் ராகவேந்திரா நகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அக்கமாதேவி தலைமையில் போலீசார் அங்கு சென்றார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்தார்கள்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் சப்–இன்ஸ்பெக்டர் அக்கமாதேவி, போலீஸ்காரர் பிரகலாத் குல்கர்னி ஆகியோர் பிடிக்க முயன்றனர். இந்த நிலையில், திடீரென்று அந்த 2 வாலிபர்களும் தங்களிடம் இருந்த ஆயுதங்களால் அக்கமாதேவி மற்றும் பிரகலாத் குல்கர்னியை தாக்கினார்கள். இதில், சப்–இன்ஸ்பெக்டர் அக்கமாதேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதுபோல, போலீஸ்காரர் பிரகலாத் குல்கர்னியும் காயம் அடைந்தார். உடனே அங்கிருந்து 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றார்கள்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ், சப்–இன்ஸ்பெக்டர் அக்கமாதேவி தங்களிடம் இருந்த துப்பாக்கியால் 2 வாலிபர்களின் கால்களை நோக்கி சுட்டார்கள். இதில், 2 பேரின் கால்களையும் குண்டுகள் துளைத்தது. இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்கள். உடனே 2 பேரையும் பிடித்து போலீசார் கைது செய்தார்கள். பின்னர் 2 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களது காலில் புகுந்த குண்டை அகற்றி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அதுபோல, பலத்தகாயம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் அக்கமாதேவி, போலீஸ்காரர் பிரகலாத் குல்கர்னி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக சம்பவம் நடந்த இடத்தை கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது கைதான 2 வாலிபர்களின் பெயர்கள் சேத்தன்(வயது 22), சிவக்குமார்(20) என்பதும், அவர்கள் கலபுரகி புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் பிரபல ரவுடிகள் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வடகிழக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யான அலோக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், “கலபுரகி புறநகரில் தனியாக வருபவர்களை தாக்கி கொள்ளையடிக்க திட்டமிட்ட பிரபல ரவுடிகளான சேத்தன், சிவக்குமாரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அவர்கள் 2 பேர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் 2 பேரும் தலைமறைவாக இருந்து வந்தார்கள். பெண் சப்–இன்ஸ்பெக்டர், மற்றொரு போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதால், தற்காப்புக்காக 2 ரவுடிகளும் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்,“ என்றார்.

இதுகுறித்து ராகவேந்திரா நகர் போலீசார், கைதான ரவுடிகள் சேத்தன், சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலபுரகியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்