வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான முகாம் 2,505 வாக்குச்சாவடிகளிலும் நடந்தது

திருச்சி மாவட்டத்தில் உள்ள 2,505 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2017-10-08 23:00 GMT
திருச்சி,

2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 22 லட்சத்து 9 ஆயிரத்து 872 ஆகும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வாக்காளர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலும், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலும் மற்றும் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள 2,505 வாக்குச்சாவடிகளிலும் அக்டோபர் 8-ந்தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு 18 வயது பூர்த்தி அடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து உரிய ஆதாரங்களுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்களை கொடுத்தனர். தொகுதிக்குள் முகவரி மாற்றம், தொகுதிக்கு வெளியே இடம் பெயர்ந்தவர்களும் திருத்தங்கள் கோரி விண்ணப்பம் செய்தனர்.

திருச்சி புனித அன்னாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி, அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பான பணிகள் வருகிற 31-ந் தேதி வரை நடை பெறுகிறது. ஆய்வின் போது தாசில்தார்கள் பாத்திமா சகாயராஜ், மணிகண்டன் உடன் சென்று இருந்தனர். 

மேலும் செய்திகள்