துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து: வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 19 பேர் படுகாயம்

திண்டுக்கல் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது, சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-10-08 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 44). பொன்மாந்துறையில் உள்ள இவருடைய உறவினர் ஒருவர் நேற்று இறந்துவிட்டார். இதையொட்டி, ராயப்பனின் உறவினர்கள் துக்க வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஒரு சரக்கு வேனில் பொன்மாந்துறைக்கு சென்றனர். சரக்கு வேனை ராயப்பன் ஓட்டினார்.

அதில், பெண்கள் உள்பட சுமார் 30 பேர் இருந்தனர். இவர்கள் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த சரக்கு வேன், பழனி சாலையில் ராமையன்பட்டி அருகே உள்ள ஒரு வளைவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வேனில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பெண்கள் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். இதைத்தொடர்ந்து, படுகாயமடைந்த பாக்யம் (55), சுசிலா மேரி (52), மரிய மாணிக்கம் (54), தமிழ்செல்வன் (35), பீட்டர் (47) உள்பட 19 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்த வழியாக வந்த வாகனங்களில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக திண்டுக்கல்- பழனி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்