காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார பணிகள் அதிகாரிகள் உள்பட 300 பேர் பங்கேற்பு

சின்னாளபட்டியில் காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Update: 2017-10-08 22:30 GMT
சின்னாளபட்டி,

சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் சின்னாளபட்டி, திண்டுக்கல், மதுரை பகுதிகளில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே சின்னாளபட்டி பகுதியில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள், தேங்கி நிற்கும் மழைநீர் பொது சுகாதாரத்தை மேலும் கேள்விக்குறியாக்கி வருகிறது. இதனால் சின்னாளபட்டி மக்கள், டெங்கு காய்ச்சல் குறித்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவின் பேரில் சின்னாளபட்டி பகுதியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார பணிகள் நடந்தன.

சுகாதார பணிகள்

இதில் நத்தம், எரியோடு, அம்மையநாயக்கனூர், தாடிக்கொம்பு, அகரம், சித்தையன்கோட்டை, ஸ்ரீராமபுரம் உள்பட 10 பேரூராட்சிகளை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள், 200 துப்புரவு பணியாளர்கள், 20 மேற்பார்வையாளர்கள் இணைந்து 8 குழுக்களாக பணியில் ஈடுபட்டனர். சின்னாளபட்டியில் உள்ள 18 வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், மழை நீரை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை முழு வீச்சில் செய்தனர்.

சுகாதார பணிகள் உதவி இயக்குனர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாக்களில் 70 மருத்துவ பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழுக்களை அழிக்க அபேட் மருந்து ஊற்றினர். அப்போது வீடுகளில் சேமித்து வைத்துள்ள தண்ணீரை ஆய்வு செய்தனர். மேலும் கொசு மருந்தும் அடிக்கப்பட்டது.

இது காய்ச்சல் அச்சத்தில் இருந்த மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரம் சுகாதார பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை தினமும் அகற்றுவதோடு, மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்