உயர்நீதிமன்ற கிளை அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் நாராயணசாமி தகவல்

புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2017-10-08 23:00 GMT
காலாப்பட்டு,

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கடந்த 1972-ம் ஆண்டு புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இக்கல்லூரியில் சட்டம் பயிலும் மாணவர்கள் மாணவ பருவத்திலேயே வாதிடும் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் இதுவரை 40 மாதிரி நீதிமன்ற போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த வருடம் சட்டம் படிக்கும் மாணவிகளுக்காக மட்டும் இப்போட்டி நடத்தப்பட்டது. மாணவிகளுக்காக மட்டும் தனியாக மாதிரி நீதிமன்ற போட்டி நடத்தப்படுவது இதுதான் முதல்முறை. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 42 சட்டக்கல்லூரி அணிகள் பங்கேற்றன.

மாதிரி நீதிமன்ற போட்டியில் கருக்கலைப்பில் பெண்களுக்கான உரிமை சம்பந்தமான சட்டப்பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. நேற்று இதன் நிறைவு விழா நடந்தது. மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜ், தலைமை தாங்கினார். நீதிபதி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். புதுவை சட்டக்கல்லூரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் வரவேற்றார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு மாதிரி நீதிமன்ற வழக்காடும் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் சட்டக்கல்லூரி அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

நாட்டில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. வழக்குகளில் வாதாட மாதிரி நீதிமன்ற போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும். புதுவையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கவும், சட்டப்பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆயத்தப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். இன்றைய மாணவர்கள் திறமையும், பெருமையும் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மேலும் ஊக்குவித்து, அவர்களின் திறமையை வளர்க்க வாய்ப்பாக அமைகிறது.

புதுச்சேரி சட்டக்கல்லூரியில் படித்து, தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சசிதரனை போல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், நீதிபதிகளும் வக்கீல்களும் உள்ளனர். அவர்களைப் பின்பற்றி வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வரவேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

விழாவில், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., ஐகோர்ட்டு நீதிபதி சசிதரன், கேரள நீதிபதி காளஸ்வரராஜ், மூத்த வக்கீல் ஐசக் மோகன் லால் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்