பொதுத்துறை காப்பீட்டு நிறுவன பங்குகளை விற்றால் போராட்டம்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்றால் போராட்டம் நடத்துவோம் என பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அகில இந்திய நிலைக்குழு செயலாளர் தெரிவித்தார்.

Update: 2017-10-08 22:45 GMT
திண்டுக்கல்,

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் தொடங்கியது. மாநாட்டுக்கு மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் தொடக்க உரையாற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர் கருமலையான், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய, சங்கத்தின் அகில இந்திய நிலைக்குழு செயலாளர் சஞ்சய் ஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

மத்திய அரசு 5 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன் மூலம் 11 ஆயிரம் கோடி நிதி கிடைக்கும். அதேநேரம் 5 நிறுவனங்களும் லாபத்துடன் தான் செயல்படுகின்றன. இதனால் தேவையான நிதி அந்த நிறுவனங்களிலேயே இருக்கிறது.

போராட்டம்

எனவே, 5 நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டியது இல்லை. பிரதமரின் ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டு திட்டத்தை பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன. ஆனால், தனியார் நிறுவனங்கள் 20 சதவீதம் கூட செயல்படுத்தவில்லை. அப்படி இருக்கையில் பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்றால், பிரதமர் ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டு திட்டத்தில் மக்களுக்கு முழுமையான பயன்கிடைக்காது.

எனவே, பொதுத்துறை காப்பீட்டு நிறுவன பங்குகளை விற்றால் நாடு முழுவதும் 65 ஆயிரம் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதேபோல் வாகனங்களுக்கான காப்பீட்டுக்கும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே வாகனங்களை வாங்கும் போது சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. பின்னர் காப்பீடு செய்யும் போது வரி விதிப்பதால், மக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வரி விதிப்பை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

இதைத்தொடர்ந்து, நேற்று 2-வது நாள் மாநாடு நடந்தது. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்