அரக்கோணத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் வருகை
மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் இன்று பயிற்சியை நிறைவு செய்த வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற உள்ளது.
அரக்கோணம்,
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் இன்று (திங்கட்கிழமை) பயிற்சியை நிறைவு செய்த வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற உள்ளது.
விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானத்தளத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு கலெக்டர் ராமன், டி.ஐ.ஜி.வனிதா, போலீஸ் சூப்பிரண்டு பகலவன், ஐ.என்.எஸ்.ராஜாளி, மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அலுவலர்கள், தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கார் மூலமாக ஐ.என்.எஸ். ராஜாளியில் இருந்து நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு சென்றார்.
இதனையொட்டி அரக்கோணத்தில் இருந்து நகரிகுப்பம் வரை 200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பாதுகாப்பு பணிகளை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், தாசில்தார் வேணுகோபால் மற்றும் வருவாய் துறையினர் செய்து இருந்தனர்.