விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் பெங்களூருவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Update: 2017-10-08 00:02 GMT

பெங்களூரு,

விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் பெங்களூருவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் ரோட்டில் வைத்து சமையல் செய்தபோது ஒரு பெண் மீது தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசுக்கு எதிராகவும் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மேலும் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோ‌ஷமிட்டனர்.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை மக்கள் அவதிப்படுவதாகவும், இதனால் பலர் விறகு மூலம் சமையல் செய்ய தொடங்கி இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் குற்றம் சாட்டினார்கள். அதனை விளக்கி காட்டும் விதமாக மைசூரு வங்கி சர்க்கிளில் உள்ள சாலையில் இளைஞர் காங்கிரசார் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்தார்கள். அப்போது சுமந்தா என்ற பெண் அடுப்பு முன்பு அமர்ந்திருந்து சமையல் செய்தார்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் விறகில் சரியாக தீ பிடிக்கவில்லை என்று கூறி, அதன்மீது பெட்ரோலை ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் விறகில் மளமளவென தீப்பிடித்தது. அந்த தீ அடுப்பு முன்பு அமர்ந்திருந்த சுமந்தாவின் மீதும் பிடித்தது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். உடனே அங்கிருந்தவர்கள் சுமந்தா மீது பிடித்த தீயை போராடி அணைத்தார்கள். பின்னர் அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் மீது தீ பிடித்ததை படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாளர்களுக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இளைஞர் காங்கிரசார் சார்பில் நடந்த போராட்டத்தில் பெண்ணின் மீது தீ பிடித்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு உண்டானது.

மேலும் செய்திகள்