தொடர் கனமழையால் பேத்தமங்களா ஏரி நிரம்பியது
தொடர் கனமழையால் பேத்தமங்களா ஏரி நிரம்பியது. இதைதொடர்ந்து கே.எச்.முனியப்பா எம்.பி. அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
கோலார் தங்கவயல்,
கோலார் தங்கவயல் அருகே உள்ள பேத்தமங்களாவில் ஏரி உள்ளது. 113 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஏரி கோலார் தங்கவயல் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோலார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.நேற்று முன்தினம் இரவு ஏரி முழுகொள்ளளவை எட்டியது. ஆனால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. ஏரியில் உள்ள மதகுகள் வழியாக நீர் கசிந்து வெளியேறி வருகிறது. இந்த ஏரி 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கோலார் தங்கவயல் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பேத்தமங்களா ஏரியில் நேற்று முன்னாள் மத்திய மந்திரியும், கோலார் தொகுதி எம்.பி.யுமான கே.எச்.முனியப்பா சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் அணையில் நவதானியங்களை முரத்தில் வைத்து தண்ணீர் விட்டார். முன்னதாக ஏரி அருகே உள்ள ஈசுவரன் கோவிலிலும் அவர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.நிகழ்ச்சியில், கே.எச்.முனியப்பாவின் மனைவி நாகரத்தினம்மா, மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவி ரூபா சசிதர், தங்கவயல் நகர அபிவிருத்தி குழும தலைவி குமாரி, தங்கவயல் நகரசபை தலைவர் ரமேஷ்குமார் ஜெயின் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதேப் போல் கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ராமக்காவும் பேத்தமங்களா ஏரி நிரம்பியதை தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.