பசுமாட்டை வேட்டையாடிய சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓட்டம்

அரிசிகெரே அருகே பசுமாட்டை வேட்டையாடிய சிறுத்தை, தனது குட்டியை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

Update: 2017-10-07 23:51 GMT

ஹாசன்,

அரிசிகெரே அருகே பசுமாட்டை வேட்டையாடிய சிறுத்தை, தனது குட்டியை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதனால் தாயை பிரிந்து பரிதவித்த நின்ற அந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே புறநகர் மினி திருப்பதி பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். விவசாயி. இவரது தோட்டம் அங்குள்ள வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. மேலும் இவர், தான் வளர்த்து வந்த பசுமாடுகளை அந்த தோட்டத்தில் வைத்து பராமரித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய சிறுத்தை ஒன்று மோகன் குமார் தோட்டத்திற்குள் புகுந்தது. மேலும் அங்கு கட்டி வைத்திருந்த பசுமாடுகளில் ஒன்றை அந்த சிறுத்தை அடித்து கொன்று வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல தோட்டத்திற்கு வந்த மோகன் குமார், தான் வளர்த்து வந்த பசுமாட்டில் ஒன்றை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கிருந்த புதர் ஒன்றில் சிறுத்தைக் குட்டி இருப்பதும் அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அரிசிகெரே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் வலையை வைத்து பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய சிறுத்தை தோட்டத்திற்குள் புகுந்து பசுமாட்டை வேட்டையாடிவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. அப்போது சிறுத்தை தன்னுடன் வந்த குட்டியை மறந்து இங்கேயே விட்டுவிட்டு சென்று இருக்கலாம். தோட்டத்தில் சிக்கிய குட்டி 6 மாதங்களே ஆன சிறுத்தை குட்டி ஆகும்.

எனவே அதற்கு திரும்பி செல்ல வழி தெரியாததால் இங்குள்ள புதரில் தஞ்சம் புகுந்திருக்க வேண்டும். 6 மாதமே ஆன சிறுத்தை குட்டி என்பதால் இதை வனப்பகுதியில் கொண்டு விடுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்