மோட்டார் சைக்கிள் – கார் மோதல் தம்பதி பலி

மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் தம்பதி பலியானார்கள். படுகாயம் அடைந்த 3 வயது குழந்தை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

Update: 2017-10-07 23:51 GMT

ஹாசன்,

மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் தம்பதி பலியானார்கள். படுகாயம் அடைந்த 3 வயது குழந்தை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா அருகே பெலகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 33). இவரது மனைவி ஷீலா(30). இவர்களுடைய மகள் இன்சனா(3). இவர்கள் 3 பேரும் நேற்று காலையில் ஹாசன் டவுனுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை மஞ்சுநாத் ஓட்டினார். ஷீலாவும், குழந்தை இன்சனாவும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் சென்னராயப்பட்டணா தேசிய நெடுஞ்சாலையில் குலாசிண்டா அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது. விபத்து நடந்த வேகத்தில் காரும் சேதமடைந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மஞ்சுநாத்தும், ஷீலாவும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். குழந்தை இன்சனா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குழந்தை இன்சனாவை மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சென்னராயப்பட்டணா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான மஞ்சுநாத், ஷீலா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை இன்சனாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்