ஆஸ்திரேலிய பெண்ணை கரம்பிடித்த சிக்கமகளூரு வாலிபர்
3 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டு பெண்ணை காதலித்து வந்த சிக்கமகளூரு வாலிபர் பெற்றோர் சம்மதத்துடன் அந்த பெண்ணை கரம் பிடித்தார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஹொன்னூர் அருகே நெடுவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி துளசம்மா. இவர்களுடைய மகன் ராஜ் நாராயண்(வயது 34). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கட்டிடக்கலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை, அந்த நிறுவனம் ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரத்தில் உள்ள தனது கிளை நிறுவனத்தில் பணியில் அமர்த்தியது. அதைத்தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லாரன் சவுக் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்தநிலையில் ராஜ் நாராயண் தன்னுடைய காதல் குறித்து பெற்றோரிடம் கூறினார். ஆஸ்திரேலிய பெண்ணை தனது மகன் காதல் செய்வதை தெரிந்த வெங்கடேசும், துளசம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர்.ஆனால் அதன் பின்னர் அவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். அதேப்போல் லாரன் சவுக்கின் பெற்றோரான சாண்டி சவுக்மன்–டான் சவுக் தம்பதியும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து இவர்களுடைய காதல் திருமணம் நேற்று முன்தினம் சிக்கமகளூருவில் உள்ள ரமேஸ்வரர் கோவிலில் இந்து முறைப்படி நடந்தது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக லாரன் சவுக்கின் உறவினர்களும், நண்பர்களும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தனர். தங்கள் ஊரை சேர்ந்த ஒரு வாலிபர், வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வதை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்களும் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினர்.வெளிநாட்டு பெண்ணை சிக்கமகளூரு வாலிபர் காதலித்து கரம்பிடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.