தலைமுடியை வெட்டும்படி கூறியதால் கல்லூரியில் 2 பேராசிரியர்களுக்கு கத்திக்குத்து

தலைமுடியை வெட்டும்படி கூறிய 2 பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்தி கல்லூரி மாணவர் வெறிச்செயலில் ஈடுபட்டார்.

Update: 2017-10-07 22:30 GMT

புனே,

புனே லோனிகண்ட் பகுதியில் ஒரு ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுனில் போர் (வயது18) என்ற மாணவர் படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று பேராசிரியர் தனஞ்சய் அப்னவே(33) என்பவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவர் சுனில் போர் தலையில் தொப்பி அணிந்திருந்தார்.

அவரது தலை முடியும் அதிகமாக வளர்ந்து இருந்தது. இதை கவனித்த பேராசிரியர் தனஞ்சய் அப்னவே மாணவர் சுனில் போரை அழைத்து, தலைமுடியை வெட்டும்படியும், வகுப்பறையில் தொப்பி அணியாமல் ஒழுக்கமாக இருக்கும்படியும் அறிவுரை கூறி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

மற்ற மாணவர்கள் மத்தியில் தன்னை பேராசிரியர் அவமானப்படுத்தியதாக சுனில் போர் கருதினார். இதற்காக பேராசிரியர் தனஞ்சய் அப்னவேவை பழிவாங்க முடிவு செய்தார். நேற்றுமுன்தினம் பேராசிரியர் தனஞ்சய் அப்னவே பாடம் நடத்தி கொண்டிருந்த போது, வகுப்பறைக்கு வந்த சுனில் போர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் அவருக்கு தலை, கழுத்து, வயிறு, கையில் பலத்த குத்து விழுந்தது. இதை பார்த்து மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தனஞ்சய் அப்னவேயின் சத்தம்கேட்டு பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த தர்‌ஷன் சவுத்ரி(30) என்பவர் ஓடி வந்து தடுக்க முயன்றார்.

அவரையும் மாணவர் சுனில் போர் தாக்கினார். இதில், அவருக்கு நெற்றியிலும், கையிலும் குத்து விழுந்தது. இதையடுத்து சுனில் போர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த பேராசிரியர்கள் இருவரையும் மற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாகோலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து லோனிகண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் சுனில் போரை வலைவீசி தேடி வருகின்றனர். வகுப்பறையில் பேராசிரியர்களை மாணவர் கத்தியால் குத்தி வெறிச்செயலில் ஈடுபட்ட இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்