நடிகை ஹேமமாலினியின் குடோனில் திருடிய வேலைக்காரர் கைது

நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான குடோனில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகள், பொருட்களை திருடிய வேலைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-10-07 22:45 GMT

மும்பை,

மும்பை அந்தேரியில் நடிகை ஹேமமாலினிக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு படப்பிடிப்பிற்கு பயன்படுத்தும் கவரிங் ஆபரணங்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. அண்மையில் ஹேமமாலினியின் மேலாளர் குடோனுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள், சிலைகள், அலங்கார பொருட்கள் காணாமல் போயிருந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து ஜூகு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கு வேலை பார்த்து வந்த வேலைக்காரர் ராஜேஷ் கிருஷ்ணா சவுத்ரி(வயது42) என்பவர் திடீரென மாயமானதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அவர் தனது சொந்த ஊரான ராய்காட் மாவட்டம் மகாடில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். இருப்பினும் அவர் திருடிய கவரிங் நகை, பொருட்கள் மீட்கப்படவில்லை. அதை அவர் எங்கு மறைத்து வைத்திருக்கிறார் என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்