தபால் நிலைய குமாஸ்தா உள்பட 4 பேர் கைது

மும்பை அந்தேரி தபால் நிலையத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தவர் சுனில் (வயது50). இவர் ஏர்போர்ட் மற்றும் ரெயில்களில் இருந்து வரும் பார்சல்களை சரிபார்ப்பது வழக்கம்.

Update: 2017-10-07 22:15 GMT

மும்பை,

மும்பை அந்தேரி தபால் நிலையத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தவர் சுனில் (வயது50). இவர் ஏர்போர்ட் மற்றும் ரெயில்களில் இருந்து வரும் பார்சல்களை சரிபார்ப்பது வழக்கம். இந்த நிலையில் பார்சல்களில் வரும் காசோலைகள் உரியவர்களிடம் போய் சேரவில்லை என அந்தேரி போலீசுக்கு புகார் வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் தபால் நிலையத்திற்கு வரும் பார்சலை பிரித்து அதில் உள்ள காசோலைகளை குமாஸ்தா சுனில் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 65 காசோலைகளை பறிமுதல் செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பார்சலில் வரும் காசோலைகளை திருடி கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அதில் உள்ள பெயரை அழித்துவிட்டு தனது பெயரை எழுதி போலி ஆவணங்கள் மூலம் வங்கி கணக்கை திறந்து அதில் காசோலைகளை செலுத்தி வந்தது தெரியவந்தது.

இதில் அவருக்கு சஞ்சய் ஜெயின், சோகன் பனாவத், கியான்சந்த் ஆகிய 3 பேர் உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 11–ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்