ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் குளறுபடி: குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக வேறு பெண்ணின் புகைப்படம் அச்சடிப்பு

திருவாரூர் அருகே ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக வேறு பெண்ணின் புகைப்படம் அச்சடிக்கப்பட்டுள்ளதால் குளறுபடி ஏற்பட்டது.;

Update: 2017-10-07 22:45 GMT

திருவாரூர்,

தமிழக அரசின் பொதுவினியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் பயன்படுத்தப்படும் ரே‌ஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக விநாயகர் படம் மற்றும் நடிகை படம் உள்ளிட்டவை அச்சடிக்கப்பட்டு பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது 75). விவசாயி. இவருக்கு ஏலாம்பாள் என்ற மனைவியும் ரவிச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர். தற்போது முருகையனுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் குடும்ப தலைவரான அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு பெண்ணின் புகைப்படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால் முருகையன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பொருட்கள் வாங்க நியாயவிலை கடைக்கு சென்றால் புகைப்படத்தை மாற்றினால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இதனால் புகைப்படத்தை மாற்ற தாசில்தார் அலுவலகத்தை முருகையன் அணுகியுள்ளார். அங்கு உடனடியாக புகைப்படத்தை மாற்றுவதில் சிக்கல் உள்ளதாக கூறி காலம் கடத்தி வருகின்றனர். வயது மூப்பு காரணமாக தன்னால் அலைய முடியவில்லை என்றும், தீபாவளி நெருங்கி விட்ட நிலையில் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுவதாகவும் உடனடியாக புகைப் படத்தை மாற்றி தருமாறு முருகையன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்