ஒரே நாளில் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு போலீஸ் விசாரணை

காரைக்காலில் ஒரே நாளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது. இதில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Update: 2017-10-07 22:30 GMT

காரைக்கால்,

காரைக்கால் பாரதியார் சாலையில் நகராட்சி திருமண மண்டபம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது 52). இவர் கம்ப்யூட்டர், செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் காஜாமைதீன் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கதவில் இருந்த பூட்டுகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்திருந்த 22 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதேபோல் கம்ப்யூட்டர் சென்டர் அருகில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டர் கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 லேப்டாப்களும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்களும், அடுத்து இருந்த மருந்து கடையில் இரத்த அழுத்தம் பரிசோதிக்கும் கருவி மற்றும் அக்குபஞ்சர் உபகரணமும் திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக காஜாமைதீன் காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்–இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் திருட்டு நடந்த கடைகளுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்