விபத்துகளை தடுக்க தற்காலிக வேக தடுப்புகள் பலனளிக்காது: சண்முகசுந்தரபுரம் விலக்கு சாலையை அகலப்படுத்த வேண்டும்

சண்முகசுந்தரபுரம் விலக்கு பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க தற்காலிக வேக தடுப்புகள் பலனளிக்காது. சாலையை அகலப்படுத்தி வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-10-07 21:00 GMT

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டியில் இருந்து தேனிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சண்முகசுந்தரபுரம் விலக்கு பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என எச்சரிக்கை பலகைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டன.

ஆனாலும் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகவே உள்ளது. வாரத்துக்கு ஒருமுறை அந்த பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நடந்த ஒரு விபத்தில் 30–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதே போல் இரவு நேரத்திலும் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவது குறையவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சண்முகசுந்தரம் விலக்கு பகுதியில் நேற்று முன்தினம் கூட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். என்னதான் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தாலும் வேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு அது சரியாக தெரிவதில்லை. மேலும் இப்பகுதியில் சாலை சற்று குறுகலாக உள்ளது. இதனால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச்செல்ல முயலும் போது விபத்தில் சிக்கிவிடுகின்றன.

விபத்துகள் தொடர்ந்து நடப்பதால் அதனை தடுக்கும் பொருட்டு சண்முகசுந்தரபுரம் விலக்கு பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். ஆனால் இது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளிக்காது. விபத்துகள் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. எனவே இப்பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் சாலையை அகலப்படுத்துவதோடு வேகத்தடைகளையும் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்