2 நாளில் 4 பேர் சாவு: டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட மேலும் 2 பேர் பலி
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பள்ளி மாணவன், மாணவி டெங்கு காய்ச்சலுக்கு இறந்துபோன நிலையில், நேற்று மேலபூவந்தியை சேர்ந்த சிறுவன், தேவகோட்டையை சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் டெங்குவிற்கு பலியாகியுள்ளனர்.;
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிவகங்கை, கல்லல், காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி, திருப்புவனம் உள்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல் கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை பெற்றனர். சிலருக்கு காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாகி சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்காக தனிவார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோக அந்தந்த தாலுகா அளவிலான அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற தனிப்பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கல்லலை சேர்ந்த மணிமாறன் என்பவருடைய மகன் மகேசுவரன்(வயது 11) என்ற 6–ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துபோனான்.
இதேபோல் கல்லலை அடுத்த மாலைகண்டான் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடைய மகள் காவ்யா(11). 6–ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பால் அவதியடைந்து வந்தார். இதனையடுத்து காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது காவ்யாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அங்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி காவ்யா நேற்று முன்தினம் இறந்துபோனார்.
மாவட்டத்தில் ஒரே நாளில் பள்ளி மாணவர்கள் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தேவகோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிமுத்து மனைவி முத்துமாரி டெங்கு காய்ச்சலுக்கு நேற்று பலியானார். இதுகுறித்த விவரம் வருமாறு:–
தேவகோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி முத்துமாரி. கணவன்–மனைவி 2 பேரும் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துமாரி பரிதாபமாக இறந்துபோனார்.
இதேபோல் திருப்புவனம் அருகே உள்ள மேலபூவந்தியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் அமுதன்(வயது 6), திருப்புவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2–ம் படித்து வந்தான். இவனுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. பூவந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமுதன், தீவிர சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அப்போது அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதன் இறந்துபோனான்.
முன்னதாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் ஏராளமானோர், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும்நிலையில், ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததே உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், அரசு டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.