இலங்கையில் உள்ள படகுகளை மீட்க செல்ல மண்டபத்தில் காத்திருக்கும் நாகை மீனவர்கள்

இலங்கையில் உள்ள படகுகளை மீட்க செல்ல நாகை மீனவர்கள் 40 பேர் கடந்த 3 நாட்களாக மண்டபத்திலேயே காத்திருக்கின்றனர்.

Update: 2017-10-07 23:45 GMT

பனைக்குளம்,

ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக மீனவர்களின் 170–க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக இலங்கை அரசால் தமிழக மீனவர்களின் 42 படகுகள் மட்டும் விடுவிக்கப்பட்டுஉள்ளன. இதில் இதுவரை மீனவர்கள் 3 கட்டங்களாக சென்று இதுவரையிலும் ராமேசுவரத்தை சேர்ந்த 7 படகுகள், புதுக்கோட்டையை சேர்ந்த 3 படகுகள் என மொத்தம் 10 படகுகள் மட்டுமே மீட்கப்பட்டு ராமேசுவரத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கையில் உள்ள நாகப்பட்டினத்தை சேர்ந்த 6 படகுகளை மீட்டு வருவதற்காக அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 மீனவர்கள் 6 படகுகளில் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மண்டபம் வந்தனர். இவர்கள் கடந்த 3 நாட்களாக மண்டபம் வடக்கு கடற்கரையில் காத்திருக்கின்றனர். நேற்று வரையிலும் அவர்களை இலங்கைக்கு அழைத்து செல்ல இலங்கையில் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தும் எந்த தகவலும் வராததால் அவர்கள் படகிலேயே தங்கியுள்ளனர்.

இதுபற்றி நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ரவி கூறியதாவது:– இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த 6 படகுகளை மீட்டு வருவதற்காக 6 படகுகளில் 40 மீனவர்கள் இலங்கை செல்ல தயாராக வந்தோம். நாங்கள் கடந்த 3 நாட்களாக மண்டபம் வடக்கு துறைமுகத்தில் காத்திருக்கிறோம். ஆனால் எங்களை இதுவரையிலும் அழைத்து செல்லவில்லை. இதுபற்றி மீன்துறை அதிகாரிகளிடம் கேட்டால் இந்திய கடலோர காவல்படையினரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும், அவ்வாறு வந்தால் கடலோர காவல் படையினரே அழைத்து சென்று இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைப்பார்கள் என்று ஒரே பதிலை திரும்ப திரும்ப கூறி வருகின்றனர்.

இலங்கை சென்று வர ஒரு படகுக்கு அரசு சார்பில் ரூ.15,000 கொடுக்கப்பட்டது. 3 நாட்கள் தங்கியிருந்ததில் அந்த பணம் முழுவதும் இங்கேயே செலவாகி விட்டது. சாப்பிடக்கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே இருக்கும்.

இந்திய கடலோர காவல்படையினர் நாகப்பட்டினத்தில் இருந்தே எங்களை அழைத்து சென்றிருந்தால் இதுபோன்ற காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. மேலும் எங்களுக்கு 400 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இப்போதே அவை தீர்ந்து விட்டது. இனி இலங்கை சென்று திரும்புவதற்கு ஒரு படகுக்கு தலா 1000 லிட்டர் வீதம் டீசல் தேவைப்படும். அதனை அரசு வழங்க வேண்டும். எங்களை உடனடியாக அழைத்து செல்ல மத்திய அரசு நடவடிக்க எடுக்க வேண்டும். வரும் நாட்களில் அந்தந்த பகுதிகளில் இருந்தே இந்திய கடலோர காவல்படையினர் அழைத்து செல்வதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்