வாலிபர் கத்தியால் குத்திக்கொலை; 4 பேர் கைது

தொண்டி அருகே முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-10-07 23:00 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த அப்துல்காதர் என்பவருடைய மகன் அஜீஸ்(25). இவருடைய குடும்பத்துக்கும் இதே ஊரைச் சேர்ந்த சுல்தான் மைதீன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் பாசிப்பட்டினத்தில் சுல்தான் மைதீன், கலந்தர், சதாம் நின்றுகொண்டு இருந்தபோது சரக்கு வாகனம் ஒன்று மோதுவது போல் சென்று உள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுல்தான்மைதீன், மலுங்குசாகிபு உள்பட 4 பேர் அஜீஸ் தந்தையிடம் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அஜீஸ் அங்குள்ள தெருவில் நடந்து சென்றபோது அவரை தாக்கி சுல்தான் மைதீன், சதாம் ஆகிய 2 பேரும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அஜீஸ் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுல்தான் மைதீன்(25), கலந்தர் (25), சதாம்(28), மலுங்கு சாகிபு (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்