செய்யாறு ஆற்று வெள்ளத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி

ஆரணி அருகே செய்யாறு ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தான்.

Update: 2017-10-07 22:30 GMT

ஆரணி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ஆரணியை அடுத்த தச்சூர் ஊராட்சி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் என்கிற புண்ணியகோட்டி (வயது 30). இவருடைய மகன் பிரவீன் (8), அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய பிரவீன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவனை காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். கிராமத்தையொட்டி உள்ள செய்யாறு ஆற்றுக்கு பிரவீன் குளிக்க சென்றிருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து புண்ணியகோட்டி தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு செய்யாறு ஆற்றுக்கு சென்று மகன் பிரவீனை தேடினார். அப்போது ஆற்றில் மழை வெள்ளம் அதிக அளவில் சென்றதால் அது குறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி பேச்சுக்காளை தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செய்யாறு ஆற்றில் இறங்கி நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை தேடினர்.

செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் கிருபானந்தம், ஆரணி தாசில்தார் ஆ.சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் மேற்பார்வையில் தேடும் பணி நடந்தது. கிராம பொதுமக்களும் விடிய விடிய தேடும் பணிக்கு துணையாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரவீனின் உடல் சம்பவ இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் ஒரு பள்ளத்தில் சிக்கி இருந்ததை மீட்டனர். இதனையடுத்து பிரவீனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பிரவீன் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்