டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் கலெக்டர் வெங்கடேஷ் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-10-07 21:15 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஷ் பேசியதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பருவமழை காலங்களின்போது ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கும் வாரம்தோறும் வியாழக்கிழமை, டெங்கு தடுப்பு தினம் என அனுசரித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள், வீடு மற்றும் வீட்டிற்கு அருகிலுள்ள சரியாக மூடாத நீர் சேமிக்கும் தொட்டிகள், குடங்கள், பாத்திரங்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த குடங்கள் போன்றவற்றில் தேங்கும் நல்ல தண்ணீரில் உருவாகும் என்பதால், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய கட்டுமான இடங்கள், காலிமனைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து பொதுஇடங்களிலும் உள்ள நல்ல தண்ணீர் தேங்கும் இடங்களையும், பொருட்களையும் கண்டறிந்து கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

கொசு ஒழிப்பு பணி

மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அனைத்து கிராமங்கள், நகர பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகிய இடங்களில் நடத்த வேண்டும். சுகாதாரத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை அனைத்து தியேட்டர்களிலும், கேபிள் டி.வி.யிலும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிபரப்ப வேண்டும். கொசு ஒழிப்பு முயற்சிகளை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், கட்டுமான பணிகளில் ஈடுபடும் சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஆயத்தமாக்க வேண்டும்.

பாதுகாப்பான குடிநீர்

உள்ளாட்சி அமைப்புகள், கொசு ஒழிப்புக்கு தேவையான கொசு நாசினி மற்றும் கொசுப்புழு நாசினி போன்றவற்றை போதுமான அளவிற்கு கையிருப்பு வைத்துக்கொண்டு, கொசு ஒழிப்பு பணியில் தினமும் ஈடுபட வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் தேவையான அளவு குளோரின் கலந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிப்பதை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து உறுதி செய்திட வேண்டும்.

சமூக நலத்துறையின் மூலம் அங்கன்வாடி, சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மூலமாக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி, மருத்துவ ரீதியாக தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கட்டில் வசதிகள், மருந்துகள், நோய் கண்டுபிடிக்கும் கருவிகள், தேவையான ரத்தம் மற்றும் தட்டணுக்கள் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்