ஒரே வீட்டில் 3 கின்னஸ் சாதனையாளர்கள்!

ஊருக்கு ஓர் உலக சாதனையாளரைப் பார்ப்பதே அரிது. ஆனால் ஒரே வீட்டில் 3 கின்னஸ் உலக சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாயில்லை?

Update: 2017-10-07 08:22 GMT
ராமநாதபுரம் முத்துராமலிங்க சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த அர்ச்சகர் வெங்கட்ராமன் மகன்கள் சுந்தரம், சங்கரநாராயணன், மகள் ரமா ஆகியோர்தான் அந்த கின்னஸ் சாதனையாளர்கள்.

அவர்கள் புரிந்திருக்கும் சாதனைகள் என்னென்ன என்று அவர்களே சொல்லக் கேட்போம்.

 முதலில் வெ. சுந்தரம்... 

‘‘நான் ராமநாதபுரம் அடைக்கலம் காத்த விநாயகர் கோவிலில் அர்ச்சகராக உள்ளேன். கடந்த 2009–ம் ஆண்டு, ஸ்டிரா எனப்படும் குளிர்பானம் அருந்தும் குழல்கள் 398–ஐ வாய்க்குள் நுழைத்து கின்னஸ் உலக சாதனை புரிந்தேன். உண்மையில் இது மிகவும் கடினமான சாதனை. ஆறு மாத காலம் நான் இதற்காகப் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் ஸ்டிராக்களை வாய்க்குள்  வைக்கும்போது ஈறுகளில் குத்தி ரத்தம் வரும். திரும்பத் திரும்ப ஸ்டிராக்களை வைப்பதால் மீண்டும் மீண்டும் குத்தி புண்ணாகும். அதனால் பல நாட்கள் சாப்பிட முடியாது. ஆனால் வலியை நினைத்தால் சாதனை படைக்க முடியாது என்று எண்ணி தொடர்ந்து பயிற்சி செய்து சாதனை புரிந்தேன்.

எனக்கு முன்பாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சைமன் எல்மோர் என்பவர் 364 ஸ்டிராக்களை வாய்க்குள் திணித்துச் சாதனை படைத்திருந்தார். அதை நான் முறியடித்தேன். எனக்கு என் அண்ணன் கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோர் உதவியாக இருந்தனர்’’ என்றார். 

இவரது தம்பி சங்கரநாராயணன். எம்.இ. கம்யூனிகே‌ஷன் என்ஜினீயரிங் படித்திருக்கிற இவர் ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் கண்ணன் கோவில் அர்ச்சகராக உள்ளார்.

விதவிதமான 736 டீ, ஜூஸ் கப்புகளை சேகரித்து சமீபத்தில் கின்னஸ் சாதனை புரிந்தார் சங்கரநாராயணன். 

ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலையில் இவர் தான் சேகரித்த கப்புகளை வரிசையாக வைத்து சாதனை படைத்தார். 

அவர் கூறுகையில், ‘‘வெவ்வேறு விதமான டீ, ஜூஸ் கப்புகளை சேகரித்துச் சாதனை புரிய கின்னஸ் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி அனுமதி பெற்றேன். சமீப சில ஆண்டுகளாக, எங்கே புதுவகை கப் கிடைக்கும் என்பதில்தான் எனது கவனம் இருந்தது. அப்படி, உள்ளூரிலும், பரமக்குடி, மதுரை, திருச்சி, கோவை, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், திருப்பதி, கொடைக்கானல், கேரளா ஆகிய இடங்களிலும் இந்த  கப்புகளை சேகரித்தேன். இச்சாதனையை லிம்கா மற்றும் அசிஸ்ட் வேல்டு ரெக்கார்டு போன்ற சாதனைப் புத்தகங்களிலும் இடம்பெறச் செய்ய திட்டமிட்டிருக்கிறேன்’’ என்றார். 

இவர் கடந்த 2008–ம் ஆண்டு மற்றொரு சாதனை புரிந்திருக்கிறார். அதுபற்றி,

‘‘நான், 151 எரியும் மெழுகுவர்த்திகளை ஒரே மூச்சில் ஊதி அணைத்து கின்னஸ் மற்றும் லிம்கா உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்தேன். அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நான் அந்தச் சாதனை செய்தேன். அதற்கு எனது குடும்பத்தினரும், யோகா மாஸ்டர் பத்மநாபனும் உறுதுணையாக இருந்தனர்’’ என்றார்.

இவர்களது தங்கையும், வீட்டில் கடைக்குட்டியுமான ரமா, எம்.சி.ஏ. படித்திருக்கிறார். இவரும் ஒரு கின்னஸ் சாதனையாளரே.

ரமா தனது கின்னஸ் சாதனை பற்றிச் சொன்னார்...

‘‘நான் கடந்த 2010–ம் ஆண்டு விதவிதமான 549 ஹேர்கிளிப்புகளை சேகரித்து கின்னஸ் மற்றும் லிம்கா உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்தேன். அதற்காக நான் செல்லும்  ஊர்களில் எல்லாம் தேடிப் பார்த்து ஹேர்கிளிப்புகளை வாங்குவது எனது வழக்கமானது. அன்றைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் முன்னிலையில் எனது சாதனை பதிவானது’’ என்றார்.

மேலும் செய்திகள்