9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அண்ணன், தங்கை கைது
பெங்களூருவை சேர்ந்தவர் ராஜூ. இவரும், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஹனூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்னா என்பரும் காதலித்து வந்தனர்.;
கொள்ளேகால்,
பெங்களூருவை சேர்ந்தவர் ராஜூ. இவரும், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஹனூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்னா என்பரும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு இருவருடைய பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காதல் ஜோடி சம்பவத்தன்று விஷம் குடித்தனர். இதில் நாகரத்னா பரிதாபமாக உயிரிழந்தார். ராஜூ காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக நாகரத்னாவின் தாயார் லட்சுமியம்மா, ராஜூ மற்றும் அருடைய உறவினர்கள் ராஜேஸ்வரி, சரவணா, பழனி, ராணி ஆகியோர் மீது ஹனூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கு கொள்ளேகால் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் ராஜூவின் உறவினர் பழனி, அவருடைய தங்கை ராணி ஆகியோர் தலைமறைவானார்கள். இந்த சம்பவம் கடந்த 2009–ம் ஆண்டு நடந்தது. 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த 2 பேரையும் கொள்ளேகால் போலீசார் சென்னை அருகே அபூர் கிராமத்தில் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொள்ளேகால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைதொடர்ந்து பழனி சாம்ராஜ்நகர் சிறையிலும், ராணி மைசூரு சிறையிலும் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.