ரூ.3 கோடி மோசடி பெங்களூருவில் பதுங்கிய நைஜீரிய வாலிபர் கைது
மேற்கு வங்காள மாநிலத்தில் நோயாளிகளுக்கு சிறுநீரகம் தருவதாகக் கூறி ரூ.3 கோடி வாங்கி மோசடி செய்துவிட்டு, பெங்களூருவில் பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் டேவிட் உஜ்மா உபா(வயது 32). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்தார். பின்னர் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் தங்கி இருந்தார். அப்போது கொல்கத்தாவில் ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரில் இணையதள முகவரி தொடங்கி, அதில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரகம் கிடைக்க தேவையான உதவிகள் செய்யப்படும் என்று டேவிட் விளம்பரம் செய்தார். அந்த விளம்பரத்தில் தனது செல்போன் எண்ணையும் இணைத்திருந்தார்.இதையடுத்து, சிறுநீரக நோயால் பாதித்த பலர் டேவிட்டின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு சிறுநீரகம் தேவை என்று கூறினார்கள். உடனே அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய டேவிட், அந்த நோயாளிகளுக்கு சிறுநீரகம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இவ்வாறு பல நோயாளிகளிடம் சிறுநீரகம் தருவதாக கூறி டேவிட் ரூ.3 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி இருந்தார். இதுகுறித்து கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை தேடிவந்தனர்.
ஆனால் போலீசார் தேடுவதை அறிந்ததும் கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு டேவிட் தப்பி சென்று விட்டார். உடனே கொல்கத்தா போலீசார் தமிழ்நாட்டுக்கு சென்று டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் அவர் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு தப்பி வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்த கொல்கத்தா போலீசார், இங்குள்ள போலீசாரின் உதவியுடன் கொத்தனூர் அருகே நாகேனஹள்ளியில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த டேவிட்டை கைது செய்தார்கள்.கைதான டேவிட்டிடம் கொல்கத்தா, பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு கொல்கத்தாவுக்கு போலீசார் அழைத்து சென்றார்கள்.