டெங்கு விழிப்புணர்வை வலியுறுத்தி கவர்னர் கிரண்பெடி நடைபயணம்

டெங்கு விழிப்புணர்வை வலியுறுத்தி கவர்னர் கிரண்பெடி இன்று நடைபயணம் மேற்கொள்கிறார்.

Update: 2017-10-06 22:00 GMT

புதுச்சேரி,

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு சார்பில் தீவிர நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. கவர்னர் கிரண்பெடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்வது, துப்புரவு பணிகளை துரிதப்படுத்துவது, மகளிர் சுய உதவி குழுவினரிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் கிருஷ்ணா நகர், நெல்லித்தோப்பு பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டார்.

நேற்று திருவள்ளுவர் நகரில் ஆய்வு செய்தார். கலெக்டர் வல்லவன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று அவர் இந்த ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். அப்போது கழிவுநீர் வாய்க்கால்களில் தூர்வாரப்பட்ட கழிவுகள் வாய்க்கால் ஓரம் கொட்டப்பட்டு மழை காரணமாக மீண்டும் அந்த கழிவுகள் வாய்க்காலுக்குள் சென்றுள்ளதை சுட்டிக்காட்டினார்.

தூர்வாரப்படும் கழிவுகளை உடனடியாக அங்கிருந்து அகற்றவும் உத்தரவிட்டார். அந்த பகுதி மக்களிடம் பேசும்போது, வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–

காலிமனைகளில் தேங்கியுள்ள குப்பை, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உள்ளாட்சித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனை உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பவும், அபராதம் விதிக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் மாணவர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்களும் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினர்.

கவர்னரின் விழிப்புணர்வு நடைபயணம் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து தொடங்குகிறது. நகரப்பகுதியில் அவர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

மேலும் செய்திகள்