விபத்தில் மாணவன் இறந்ததால் கண்ணாடி உடைப்பு: அரசு பஸ்கள் 3 நாட்களாக நிறுத்தம்

வேடசந்தூர் அருகே விபத்தில் மாணவன் இறந்த ஆத்திரத்தில் பஸ் கண்ணாடியை பொதுமக்கள் உடைத்ததால், அரசு பஸ்கள் 3 நாட்களாக நிறுத்தப்பட்டன. அதனால் 9 கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2017-10-06 22:00 GMT

வேடசந்தூர்

வேடசந்தூர் அருகே உள்ள டொக்குவீரன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. கட்டிடத் தொழிலாளி. இவருடைய மகன் வினித்குமார்(வயது 12). இவன் தேவநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3–ந்தேதி மாலை பள்ளி முடிந்ததும், வினித்குமார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினான்.

அப்போது வேடசந்தூரில் இருந்து ஆர்.கோம்பை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில், வினித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த தேவநாயக்கன்பட்டி பொதுமக்கள் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் வேடசந்தூர்–ஆர்.கோம்பை, வேடசந்தூர்–புதுரோடு இடையே இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் கடந்த 3 நாட்களாக திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. வேடசந்தூர்–ஆர்.கோம்பை இடையே 8 முறையும், வேடசந்தூர்–புதுரோடு இடையே 2 முறையும் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக காளனம்பட்டி, டொக்குவீரன்பட்டி, நத்தப்பட்டி, தேவநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, வெல்லம்பட்டி, புதுரோடு, கோவிலூர், ஆர்.கோம்பை ஆகிய 9 கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மில் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மீண்டும் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்