ஊத்துக்குளி அருகே கொலை செய்யப்பட்ட இளம்பெண் அடையாளம் தெரிந்தது கொலையாளி யார்? போலீசார் விசாரணை

ஊத்துக்குளி அருகே கொலை செய்யப்பட்ட இளம்பெண் அடையாளம் தெரிந்தது. கொலையாளி யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-10-06 23:00 GMT

ஊத்துக்குளி,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளியில் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணியர் விடுதி அருகே கடந்த மாதம் 28–ந்தேதி காலை 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் அருகில் அந்த பெண்ணின் 2 வயது ஆண் குழந்தை ரத்தத் துளிகளுடன் விடிய விடிய அழுது கொண்டு அருகில் இருந்தது. அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த குழந்தையை மீட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள ஒரு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பள்ளிவாசல் தெருவில் பிறரிடம் உதவி கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் அந்த பெண் திருப்பூர் மாவட்டம் மூலனூர் காளிபாளையம் பிரிவு அருள்ஜோதி நகரை சேர்ந்த சிதம்பரம்–லட்சுமி தம்பதியின் 3–வது மகள் சந்திரா (30) என்றும், இவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதும், இவருடைய முதல் சகோதரி சாவித்திரி மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதும், 2–வது சகோதரி சாந்தி என்பவர் திருப்பூர் பாளையக்காடு பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவருடன் திருமணம் நடைபெற்று பாளையக்காடு பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

சந்திராவுக்கு கோவையை சேர்ந்த தொழிலாளி சதாசிவம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்ற 6 மாதத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்த சந்திரா, கோவையில் தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பின் கோவையில் இருந்து தினமும் ரெயில் மூலம் திருப்பூர் வந்து தனது மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இவரை அவரது தாயார் கண்டித்து மூலனூர் அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் சில நாட்கள் தாயாருடன் வசித்து வந்த சந்திரா, திடீரென்று வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. அவருடைய குடும்பத்தினரும் சந்திராவை தேடும் முடிவை கைவிட்டனர்.

இந்நிலையில் திருப்பூர் பாளையக்காடு பகுதியில் வசித்து வரும் தனது சகோதரி சாந்தியை கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் செல்போனில் தொடர்பு கொண்ட சந்திரா, தான் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் துணைக்கு ஒருவரும் இல்லாத காரணத்தினால் உதவிக்கு வரும்படியும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சாந்தி விரைந்து சென்றார். அங்கு சென்ற பின் தான் தனது சகோதரி நிறைமாத கர்ப்பிணியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. அதன்பின்னர் ஆஸ்பத்திரியில் சந்திராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் தந்தை பெயர் பாலாஜி என்று ஆஸ்பத்திரியில் பதிவு செய்துள்ளார்.

குழந்தை பிறந்த பின்பு அவருடைய அக்கா வீட்டுக்கு அழைத்தும் அவருடன் செல்லாமல் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே பள்ளிவாசல் தெருவில் தங்கி, பிறரிடம் உதவி கேட்டு குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் சம்பவத்தன்று செங்கப்பள்ளி பயணியர் விடுதி அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் எப்படி செங்கப்பள்ளி வந்தார்? அவரை யார் அழைத்து வந்தார்கள்? குழந்தையின் தந்தை என்று ஆஸ்பத்திரி பதிவேட்டில் உள்ள பாலாஜி யார்? என்றும் சந்திராவுடன் பழகியவர்கள் யார்? என்றும், சந்திரா வழக்கமாக சென்று வந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள பதிவுகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான சந்திராவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அதனை அவரது தாயார் மற்றும் சகோதரி அடையாளம் காட்டி பெற்றுக்கொண்டனர். மேலும் கிணத்துக்கடவு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்திராவின் 2 வயது மகன் பெயர் விஜய் என்றும், அவனுக்கும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது குழந்தை விஜய் காப்பகத்திலேயே உள்ளான் என்பதும், சந்திராவின் தாயார் அந்த குழந்தையை தன்னுடன் அழைத்து செல்லவில்லை என்பதும் போலீசார் தெரிவித்தனர்.

சந்திராவை செங்கப்பள்ளி அழைத்து வந்து கொடூரமாக கொலை செய்த கொலையாளி யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்