அம்பத்தூரில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி தாய் கண் எதிரே பரிதாபம்

அம்பத்தூரில் தாய் கண் எதிரேயே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-10-06 22:45 GMT

அம்பத்தூர்,

சென்னை நொளம்பூர் வி.ஜி.என். நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பழனி(வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி பொற்கொடி(30). இவர்களுடைய மகன் மிதுன்ராம்(14). இவர், நொளம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை பொற்கொடி தனது மகனுடன் மொபட்டில் அம்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மொபட்டை பொற்கொடி ஓட்ட, பின்னால் மிதுன்ராம் அமர்ந்து இருந்தார்.

அம்பத்தூர் தொலைபேசி நிலையம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கோயம்பேட்டில் இருந்து வதட்டூர் செல்லும் மாநகர பஸ்(தடம் எண் 77எப்) மொபட் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது மிதுன்ராம் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் அவர், தாய் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பொற்கொடி காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பலியான மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான மிதுன்ராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மாநகர பஸ் டிரைவரான ஆவடியைச் சேர்ந்த ஹேமந்த்குமார்(26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்