திருப்பதியில் தமிழர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி செம்மரங்களை கைப்பற்றிய கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

திருப்பதியில் தமிழர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி செம்மரங்களை கடத்தல்காரர்கள் கைப்பற்றினர். இதையடுத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள், ஒரு நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

Update: 2017-10-06 22:30 GMT

திருப்பதி,

திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவாரிமெட்டு மலை அடிவாரத்தில் உள்ள சச்சினோடு பண்டா அருகே செம்மரம் வெட்டி வந்த கடத்தல்காரர்கள் சென்றதற்கான வழித்தடங்கள் தெரிந்தன.

இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில் ஒரு குழுவினரும், துணை வனச்சரகர் நரசிம்மராவ் தலைமையில் மற்றொரு குழுவினரும் தனித்தனியாக பிரிந்து கடத்தல்காரர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் செம்மரங்களை வெட்டி கடத்தி சென்றனர். அவர்களை பார்த்த சந்திரகிரியை அடுத்த ஐத்தேபள்ளியை சேர்ந்த பவன் தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு துப்பாக்கியுடன் சென்று அவர்களை மிரட்டினர். இதில் 12 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த கணேஷ் என்பவரை பிடித்து அந்த பகுதியில் இருந்த 13 செம்மரங்களை கைப்பற்றி கொண்டனர்.

இந்த நிலையில் துணை வனச்சரகர் நரசிம்மராவ் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு வந்து அவர்களை சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை பார்த்த பவனக் மற்றும் அவனது கூட்டாளிகள் 2 பேர் தப்பி ஓடினர்.

இதில் ஐத்தே பள்ளியை சேகர், அவரது மகன் முனிகிருஷ்ணா, கண்ணமங்கலத்தை சேர்ந்த கணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி அதற்கான குண்டுகள், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 13 செம்மரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கடத்தல்காரர்களை பிடித்த போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் ஐ.ஜி. காந்தாராவ் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் தப்பி ஓடிய 12 பேரையும், துப்பாக்கியுடன் வந்த பவன் மற்றும் கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் பிடிக்க கூடுதல் படையினர் வனப்பகுதிக்கு சென்று அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்