தேனி அருகே, விடுதியில் தங்கி படிக்க விரும்பிய மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை

தேனி அருகே விடுதியில் தங்கி படிக்க விரும்பிய மருத்துவக்கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-10-06 23:15 GMT

தேனி,

தேனி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரத்தை சேர்ந்தவர் முரளி. விவசாயி. இவருடைய மனைவி மணிமொழி. இவர்களுடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 21). இவர், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தினமும் வீட்டில் இருந்து மருத்துவக்கல்லூரிக்கு சென்று வந்தார். இவர், தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்குவது வழக்கம். தினமும் காலை 7 மணியளவில் எழுந்து, பின்னர் கல்லூரிக்கு புறப்பட்டு சென்று வந்துள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு மாடிக்கு தூங்கச் சென்றவர், நேற்று காலை 8 மணி வரை இறங்கி வரவில்லை. இதையடுத்து அவருடைய தாயார் மணிமொழி மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் வாயில் நுரை தள்ளிய நிலையில், படுக்கையிலேயே இறந்து கிடந்துள்ளார்.

அந்த அறையில் காலி வி‌ஷ பாட்டில் கிடந்தது. இதனால், அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய தாயார் மணிமொழி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘இரவு சாப்பிட்டு விட்டு தூங்க செல்லும் போது, நாளை (இன்று) முதல் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படிக்கப் போகிறேன் என்று கூறிச் சென்றார். காலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இறப்பில் சந்தேகம் எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்துள்ளார். விடுதியில் தங்கி படிக்கப் போகிறேன் என்று கூறிச் சென்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்