மாயமான சட்ட கல்லூரி மாணவி உடல் துண்டான நிலையில் தண்டவாளத்தில் மீட்பு

மாயமான சட்ட கல்லூரி மாணவி தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2017-10-06 22:45 GMT

மும்பை,

இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் (ஐ.சி.ஏ.ஐ.) தலைவராக இருப்பவர் நீலேஷ். பரேல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மகள் பல்லவி (வயது 21). வில்லேபார்லேயில் உள்ள தனியார் சட்ட கல்லூரியில் படித்து வந்தார். மேலும் மும்பை கோட்டை பகுதியில் உள்ள பிரபல சட்டநிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். கடந்த புதன்கிழமை மாலை மாணவி மாயமானார். இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி கடைசியாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்பட்ட மின்சார ரெயிலில் ஏறும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் அவர் எங்கு இறங்கினார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில் கரிரோடு – பரேல் இடையே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் உடல் துண்டான நிலையில் மீட்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண் பல்லவி என்பது தெரியவந்தது. அவரது உடல் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பல்லவி மாயமான அன்று ‘‘ தனது இந்த முடிவிற்கு யாரும் காரணமில்லை ’’ என குடும்பத்தினருக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது. எனவே அவர் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கூறினர். எனினும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்