எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய விபத்து சமூக ஆர்வலர்களுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Update: 2017-10-06 22:45 GMT

மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் இனிமேல் நடைபெறாததை உறுதிப்படுத்துமாறு ரெயில்வேக்கு உத்தரவிட கோரி மும்பை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர்கள் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி என்.எம்.ஜாம்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக ஆர்வலர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:–

விபத்து நடைபெறும் வரை சமூக ஆர்வலர்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றனர். 23 பேர் பலியான பின்னரே, திடீரென விழித்து கொண்டு ஐகோர்ட்டை நாடுகிறார்கள். இது மிகவும் தீவிரமான, உணர்வுப்பூர்வமான பிரச்சினை. ஆனால், மனுதாரர்கள் இதை வைத்து சுய விளம்பரம் தேட விரும்புகிறார்கள். விபத்து நடைபெறுவதற்கு முன்பே, இந்த மனுக்களை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்